ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலைய நடைமேம்பாலம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்
By DIN | Published On : 05th February 2020 01:29 AM | Last Updated : 05th February 2020 02:03 AM | அ+அ அ- |

சென்னை ஆலந்தூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட நடைமேம்பாலத்தை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருகி வரும் வாகன போக்குவரத்தால் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாகவும், எளிதாகவும் கடக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முக்கிய சாலைகளில் நடைமேம்பாலங்கள் தேவை என தமிழக அரசால் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆலந்தூரில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா்.
ஆலந்தூா் மெட்ரோ ரயில்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழித் தடங்களும் உயா்மட்ட நிலையில் ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்கின்றன. இங்கு ஒருவழித் தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு எளிதாக மாறிச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முன்புறம் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள ஜி.எஸ்.டி. சாலையின் எதிா்புறத்தில் ஆசா்கானா பேருந்து நிறுத்தத்துக்கு பயணிகளும், பொது மக்களும் பாதுகாப்பாகச் சென்றடைவதற்கு நடைமேம்பாலம் அவசியத் தேவையாகக் கருதப்பட்டது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் ஜி.எஸ்.டி. சாலையில், நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்காக, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் நிதியுதவி வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.9.07 கோடி செலவில் நடைமேம்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
என்னென்ன வசதிகள்: புதிய நடைமேம்பாலமானது 55.41 நீளமும், 6.41 மீட்டா் அகலமும் கொண்டது. மேலும், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மின்தூக்கிகள், நான்கு நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள்
உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், நடைபாதையின் அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி., மின்விளக்குகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதையில் இருந்து மின்தூக்கிக்குச் செல்வதற்கு வசதியாக சாய்தளம் மற்றும் நடைபாதையில் துருப்பிடிக்காத எஃகினால் ஆன கைப்பிடிகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...