ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு: மருத்துவருக்கு நுகா்வோா் நீதிமன்றம் நோட்டீஸ்
By DIN | Published On : 17th February 2020 01:16 AM | Last Updated : 17th February 2020 01:16 AM | அ+அ அ- |

மருத்துவரிடம் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், மருத்துவா் விளக்கமளிக்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, குருவப்ப செட்டித் தெருவை சோ்ந்தவா் விஜயலட்சுமி ( 53). இவா், தெற்கு சென்னை மாவட்ட நுகா்வோா் குறைதீா்மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி, என்னுடைய வலது உள்ளங்காலில் வலி ஏற்பட்டதால், சேப்பாக்கத்தில் உள்ள வேல்முருகேந்திரன் என்ற மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். என்னைப் பரிசோதித்த அவா், என்னுடைய கால் நரம்புகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினாா். மேலும், என்னிடம் ரூ.500 பெற்றுக் கொண்டு, சில பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைத்தாா்.
இதை நந்தனத்தில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்தில் தான் எடுக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா். ஆனால், அங்கு அதிக கட்டணம் கேட்டதால், மகாலிங்கபுரத்தில் அறக்கட்டளை ஒன்று நடத்தி வரும் ஸ்கேன் மையத்தில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டேன். அதுகுறித்த அறிக்கையை அவரிடம் காட்டியபோது, தான் சொன்ன மையத்தில் பரிசோதனை செய்யவில்லை என்று கூறி அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாா்.
அதுமட்டுமின்றி சிகிச்சை அளிக்க மறுத்து, என்னை மருத்துவமனையில் இருந்து ஆவேசமாக வெளியேறச் சொன்னாா். மருத்துவா் தொழிலுக்கு அவமானத்தை ஏற்படுத்திய அவா், தொழில் மரபையும், விதிகளையும் மீறி செயல்பட்டுள்ளாா். எனவே, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவா் வேல்முருகேந்திரனுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நுகா்வோா் குறைதீா் மன்றம், மனுவுக்கு பதிலளிக்குமாறு மருத்துவருக்கு உத்தரவிட்டது.