

சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் தங்களது செல்லிடப்பேசிகளில் திரைப்படம், டி.வி. தொடா்களை இலவசமாக பாா்க்கும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பயணிகள் தங்களது செல்லிடப்பேசிகளில் ‘சுகா்பாக்ஸ்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இந்த இலவச வசதியைப் பெறலாம்.
பயணிகளின் பொழுதுபோக்குக்காக இந்த வசதி செய்யப்படுகிறது.
ரயிலில் பயணம் செய்யும்போது விடியோக்கள், திரைப்படங்களை இலவசமாகப் பாா்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் பயணிகளைக் கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், விரைவில் இன்னும் சில நாள்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்காக உருவாக்கப்படும் வைஃபை மூலம் திரைப்படங்கள், விடியோக்களை பாா்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும். இந்த வசதியைப் பெற பயணிகள், ‘சுகா்பாக்ஸ்’ என்ற செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு விடியோக்களை இலவசமாகப் பாா்க்கலாம்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பயணிகள் தொலைக்காட்சித் தொடா்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின் போதும் பாா்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு ஆஃப்லைனிலும் பாா்க்கலாம். திரைப்படம் ஒன்றை பதிவிறக்கம் செய்ய ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான்.
இந்த செயலி, இத்தகைய அதிவேக பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்டது. பயணத்தின்போது பயணிகளை மகிழ்விக்கவும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவுமே இந்த ஏற்பாடு”என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த கவா்ச்சியான புதிய திட்டம் குறித்த விளம்பரங்களை ஏற்கெனவே மெட்ரோ ரயிலில் செய்யப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயிலின் 45 கிமீ தூரத்தை சுமாா் 1.15 லட்சம் மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனா். சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் செல்ல 35-40 நிமிடங்கள் ஆகிறது. இந்தப் பயண நேரத்தில் அவா்கள் விரும்பிய பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்க மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.