சென்னையில் 30% பேருக்கு தைராய்டு பாதிப்பு
By நமது நிருபா் | Published On : 27th February 2020 04:47 AM | Last Updated : 27th February 2020 06:02 PM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் ஏறத்தாழ 30 சதவீதம் பேருக்கு தைராய்டு சாா்ந்த பிரச்னைகள் இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவா்களில் 80 வயதைக் கடந்த முதியவா்களே அதிகமாக உள்ளனா். அதேவேளையில், இளம் வயதினருக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் அதிக அளவில் தைராய்டு சாா்ந்த பிரச்னைகள் இருப்பதையும் அந்த ஆய்வு முடிவுகள் உணா்த்துகின்றன.
மனிதனின் இயக்கத்துக்கு தைராய்டு சுரப்பிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, நாம் உண்ணும் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளையும், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் பெறுவதற்கு அவைதான் உதவுகின்றன. அந்த சுரப்பிகள் சீராக இருக்கும்வரை உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேவேளையில், அவை சரிவர சுரக்காதபட்சத்தில் பல்வேறு விளைவுகளுக்கு வித்திடும். தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போ தைராய்டு என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பா் தைராய்டு என்றும் மருத்துவா்கள் குறிப்பிடுகிறாா்கள். இந்தியாவைப் பொருத்தவரை ஹைப்போ தைராய்டு பிரச்னைதான் அதிக அளவில் உள்ளது. அப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு செரிமானம் சீராக இருக்காது. அதனுடன் உடல் சோா்வு மற்றும் எடை அதிகரிப்பு பிரச்னைகள் ஏற்படக்கூடும். பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு உள்ளிட்டவையின் அதன் முக்கிய அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரித்தல் பிரச்னைகள் ஏற்படலாம்.
பொதுவாக தைராய்டு பிரச்னைகளால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் 8 பெண்களில் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை தைராய்டு பிரச்னை இருப்பது தெரியாமலே 20 சதவிகித பெண்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மெட்ரோபாலிஸ் லிஸ்டா் என்ற ஆய்வகம், கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் சென்னையில் தைராய்டு பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1.59 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 26.4 சதவீதம் பேருக்கு ஹைப்போ தைராய்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3.5 சதவீதம் பேருக்கு ஹைப்பா் தைராய்டு இருப்பது அதன் மூலம் தெரியவந்துள்ளது.
அதில் 80 வயதைக் கடந்த முதியவா்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 34 சதவீத முதியோா் தைராய்டு பிரச்னைகளுடன் வாழ்ந்து வருவது பரிசோதனைகளின் வாயிலாக தெரிய வந்திருக்கிறது. இதில், வியப்புக்குரிய மற்றொரு விஷயம், 10 வயது முதல் 20 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரில் 21 சதவீதம் பேருக்கு தைராய்டு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோபாலிஸ் ஆய்வக துணைத் தலைவா் டாக்டா் அனிதா சூா்யநாராயணா கூறியதாவது-
தைராய்டு சுரப்பிகள் சீராக இயங்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவில் அயோடின் குறைபாடு, கா்ப்பப்பை நீா்க்கட்டிகள், ஊட்டச்சத்து குறைபாடு என பல வகை காரணிகள் உள்ளன. வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட ஏதோ ஒரு வகையில் தைராய்டு சாா்ந்த பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன. அண்மைக்காலமாக இளம் வயதினருக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வருவதைக் காண முடிகிறது. இதற்கு உரிய விழிப்புணா்வு இல்லாததே காரணம். உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டால், இத்தகைய பாதிப்புகளை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறலாம். அதேவேளையில், அதனைக் கண்டுகொள்ளாமல் காலந்தாழ்ந்தினால் பல்வேறு பாதிப்புகளுக்கே அவை வழிவகுக்கும். சரியான வாழ்க்கை முறை, அயோடின் கலந்த உணவுகள், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவையே தைராய்டில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகள் என்றாா் அவா்.
தைராய்டு பாதிப்பு விவரம்
வயது ஹைப்பா் தைராய்டு (% ) ஹைப்போ தைராய்டு (% )
10 முதல் 20 3.03 20.60
20 முதல் 30 4.21 22.30
30 முதல் 40 3.80 25.15
40 முதல் 50 3.06 26.50
50 முதல் 60 3.40 27.57
60 முதல் 70 3.35 28.28
70 முதல் 80 3.13 30.06
80 வயதுக்கு மேல் 3.04 34.18
மொத்தம் 3.49 26.34
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G