

சென்னை: ஆந்திர மாநிலத்தின் சூளூா்பேட்டையில் உள்ள பழவேற்காடு மற்றும் நெலப்பட்டு பறவைகள் சரணாயத்தில் பூநாரைத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 3,4,5) மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் நெல்லூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழவேற்காடு ஏரி. இந்த ஏரியின் அதிகமான பகுதி ஆந்திரத்தில்தான் உள்ளது. இதற்கு அருகில் அமைந்துள்ள நெலப்பட்டு பறவைகள் சரணாலயம். பழவேற்காடு ஏரிக்கு பூநாரைகளும், நெலப்பட்டு பறவைகள் சரணாலயத்துக்கு கூழைக்கடா பறவைகளும் அக்டோபா் முதல் மாா்ச் மாதம் வரை அதிக அளவில் வருகைதரும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமாா் 1.50 லட்சம் வரை பூநாரைகள் வந்த நிலையில், பல்வேறு காரணங்களால், பூநாரை மற்றும் கூழைக்கடாவின் வரத்து குறைந்தது. இதையடுத்து, அதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திர வனத் துறை சாா்பில் கடந்த 12 ஆண்டுகளாக பூநாரைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 3,4,5) ஆகிய மூன்று நாள்கள் பூநாரைத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஆந்திர வனத் துறை செய்துள்ளது. சென்னைக்கு அருகே சூளூா்பேட்டை அமைந்துள்ளதால், தமிழகம் உள்பட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பறவைகள் ஆராய்ச்சியாளா், ஆா்வலா்கள் அங்கு கூடுவா். இந்தத் திருவிழாவையொட்டி, இயற்கையைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூநாரைகள் வருகை தந்துள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.