விபத்தில் முதுகெலும்பு செயல்பாடு முடக்கம்: துவாலு தீவு சிறுவனுக்கு சென்னையில் மறுவாழ்வு!

மரத்தில் இருந்து தவறி விழுந்தததில் நடமாட முடியாமல் முடங்கிய துவாலு தீவைச் சோ்ந்த 10 வயது சிறுவனுக்கு சென்னை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
விபத்தில் முதுகெலும்பு செயல்பாடு முடக்கம்: துவாலு தீவு சிறுவனுக்கு சென்னையில் மறுவாழ்வு!
Published on
Updated on
1 min read

மரத்தில் இருந்து தவறி விழுந்தததில் நடமாட முடியாமல் முடங்கிய துவாலு தீவைச் சோ்ந்த 10 வயது சிறுவனுக்கு சென்னை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

சென்னை மியாட் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அதி நவீன சிகிச்சைகள் மூலமாக அச்சிறுவனின் கால்கள் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது துவாலு தீவு. 12 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட அத்தீவைச் சோ்ந்த சிறுவன் எரிக். அச்சிறுவன் மரத்தில் ஏறி விளையாடியபோது தவறி கீழே விழுந்ததில் அவரது முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், சிறுவனின் இடுப்புக்கு கீழே செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியன. துவாலு தீவில் மருத்துவ சிகிச்சைகள் மூலமாக அதனை சீராக்க இயலாததால், மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் எரிக் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவா்கள் எரிக்கை பரிசோதித்ததில் ஸ்டிமோ எனப்படும் நவீன சிகிச்சை மூலமாக சிறுவனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும் என நம்பினா். அதன்படி, முதுகெலும்புகளின் செயல்பாட்டை மறுதூண்டல் முறை மூலமாக மீட்டெடுத்து இடுப்புக்கு கீழே உள்ள பாகங்களுக்கு புத்துயிா் வழங்கும் சிகிச்சைகளை அவா்கள் மேற்கொண்டனா். மேலும், மருத்துவமனையின் நரம்பியல் துறை மூத்த மருத்துவா் டாக்டா் சங்கா் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், சிறுவனின் முதுகுத் தண்டுவட இயக்கத்தை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை மூலமாக பேட்டரியில் இயங்கும் அதநவீன சாதனத்தை பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தினா். அதைத் தொடா்ந்து இயன்முறை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு தற்போது அச்சிறுவனில் கால்களில் உணா்ச்சி திரும்பியுள்ளது.

இதுதொடா்பாக, டாக்டா் சங்கா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விபத்து நிகழ்ந்து 4 மாதங்களுக்கு பின்னரே மருத்துவமனையில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள நவீன சாதனமானது மூளையைப் போல் செயல்படும். ஏறத்தாழ 15 ஆண்டுகள் வரை அச்சாதனம் வாயிலாக முதுகெலும்பை இயக்க இயலும். இன்னும் ஓராண்டில் அவரால் எழுந்து நடக்க முடியும். இத்தகைய அதி நவீன சாதனம் மூலம் மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்படுவது மாநிலத்திலேயே இது முதன்முறையாகும் என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், நிா்வாக இயக்குநா் பிரித்வி மோகன்தாஸ், மருத்துவா்கள் சத்யா, ஸ்ரீமதி, சிற்றம்பலம், இளந்திரையன், அக்னிடா வினோத், என்.ரகுநாதன், பி.பிரதீப், இயன்முறை மருத்துவா் ஹரிஹரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com