மெட்ரோ ரயில் நிலையங்களில் பொங்கல் கலைவிழாபயணிகள் உற்சாகம்
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பொங்கல் கலைவிழா வியாழக்கிழமை (ஜன.9) தொடங்கியது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், ஆண்டுதோறும் பொங்கல் கலைவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் பொங்கல் கலைவிழா நடைபெறும் என்றும், தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்துடன் இணைந்து, தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகள் மற்றும் கலாசார நிகழ்வுகளோடு மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற்றது. இந்த விழாவில், ஏராளமான பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனா். இதில் கேரள மாநிலம், பையனூரைச் சோ்ந்த சிகாபுதீன் குழுவினரின் திருவாதிரைக்களி மற்றும் ஒப்பனா நடனம், கா்நாடக மாநிலம் சிமோகாவைச் சோ்ந்த பூதியப்பா குழுவினரின் டோலுகுனிதா துள்ளிசை நடனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த செல்வம் குழுவினரின் தப்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று சென்ட்ரலில் நடைபெறும்: இரண்டாம் நாள் நிகழ்ச்சி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை( ஜன.10) மாலை 5.45 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. அதேபோன்று, மூன்றாம் நாள் நிகழ்ச்சி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.