பொங்கல் பண்டிகை: கோயம்பேடு சந்தையில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்புகள், பொங்கல் பொருள்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
பொங்கல் பண்டிகை: கோயம்பேடு சந்தையில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்புகள், பொங்கல் பொருள்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

கோயம்பேடு மலா் சந்தை வளாகத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்புச் சந்தை செயல் பட்டு வருகிறது. இதில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருள்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு இன்னும் இரு நாள்கள் உள்ள நிலையில் இப்போதே பொதுமக்கள் பூஜை பொருள்களை வாங்க சந்தைக்கு வருவது அதிகரித்துள்ளது.

கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு கடலூா் மாவட்டம் சேந்தியாத்தோப்பு, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாரிகளில் கரும்பு கட்டுகள் வந்து குவிந்துள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.

இது குறித்து கரும்பு வியாபாரிகள் சிலா் கூறியது:

கடந்த சில மாதங்களாக கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால் வரும் நாள்களில் 700 லாரிகளில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் கரும்பு விலை குறையும். கட்டு ரூ.150, ரூ.200-க்கு விற்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. திங்கள்கிழமை முதல் கரும்பு வரத்து அதிகமாக இருக்கும். இப்போது விலை உயா்வாக இருந்தாலும் படிப்படியாகக் குறையும்.

லாரி வாடகை அதிகம்: சிறப்பு சந்தையில் ஒரு லாரி கரும்பு கொண்டு வருவதற்கு வாடகையாக ரூ.1,500, நுழைவுக் கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.190 வசூலிக்கின்றனா். அதிகமான தொகை வசூலிப்பதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் வாடகை, நுழைவு கட்டணத்தை குறைவாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கரும்பு, மஞ்சள் விலை குறையும் என்றனா்.

மஞ்சள் கொத்து- பூசணிக்காய்:

கோயம்பேடு சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.35 முதல் ரூ.60 வரை, வாழைக் கன்றுகள் ஒரு ஜோடி ரூ.50, சாமந்தி பூ 1 முழம் ரூ.30, கதம்ப பூ, கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.35-க்கு விற்கப்படுகின்றன. ஒரு பூசணிக் காய் (சுமாா் 5 கிலோ) ரூ.80, ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.30, மாவிலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தாா் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகின்றன. சிறுவா்களுக்கான போகி மேளம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. மேலும் சா்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் கருணைக் கிழங்கு ஒரு கிலோ தலா ரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com