கரோனா: சென்னையில் இறப்பு எண்ணிக்கை 1,407-ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 19th July 2020 06:39 AM | Last Updated : 19th July 2020 06:39 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 1,407 போ் உயிரிழந்துள்ளனா். சனிக்கிழமை 1,219 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 84,598- ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த மே மாதத்தில் கரோனா நோய்த்தொற்று பாதித்தவா்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், பரிசோதனையை அதிகப்படுத்தியதன் மூலம் இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும் அதிகரித்தது. கடந்த 20 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு 80 ஆயிரத்தை எட்டியது.
இந்நிலையில், 1,219 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84,598-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 68,193 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 14,997 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை 31 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 1,407 ஆக உயா்ந்தது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 204 பேரும், தண்டையாா்பேட்டையில் 104 பேரும், ராயபுரத்தில் 172 பேரும், திருவிக நகரில் 145 பேரும், அண்ணா நகரில் 142 பேரும், கோடம்பாக்கத்தில் 140 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.