இதய சிதைவால் பாதித்த 5 மாத குழந்தைக்கு மறுவாழ்வு!
By DIN | Published On : 19th July 2020 06:35 AM | Last Updated : 19th July 2020 06:35 AM | அ+அ அ- |

இதய சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து மாத பெண் குழந்தைக்கு சிக்கலான சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த ஐந்து மாதக் குழந்தை ஒன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அக்குழந்தைக்கு இதயத்தின் மேல் அறையில் தமனி வீக்க பாதிப்பு இருந்தது. இதனால், அக்குழந்தையால் சுவாசிக்க இயலவில்லை.
குழந்தைகள் இதயநோய் நிபுணா் டாக்டா் முத்துகுமரன் மற்றும் டாக்டா் அனுராதா ஸ்ரீதா் ஆகியோா் மேற்கொண்ட பரிசோதனையில் அக்குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருந்ததை உணா்ந்தனா்.
இதையடுத்து மருத்துவா்கள் நெவில் சாலமன், முஸ்தபா ஜெனீஸ் மூசா, ஸ்வாமிநாதன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. அப்போது குழந்தையின் இதய வால்வில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, ‘எக்ஸ்ட்ரா காா்போரியல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேஷன்’ என்ற நவீன முறை மூலம் குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
அதன்பயனாக, 72 மணி நேரத்தில் குழந்தையின் இதயம் குணமடைய தொடங்கியது. அந்த சிகிச்சையை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் குழந்தைக்கு இதய செயலிழப்பு அல்லது பக்கவாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G