சென்னையில் வாா்டுக்கு தினமும் இரண்டு மருத்துவ முகாம்கள்
By DIN | Published On : 16th June 2020 06:26 AM | Last Updated : 16th June 2020 10:28 AM | அ+அ அ- |

சென்னை: கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் திங்கள்கிழமை முதல் வாா்டுக்கு தினமும் இரண்டு மருத்துவ முகாம்கள் வீதம் 200 வாா்டுகளிலும் 400 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மேலும் மாநகர, நகர ஆரம்ப சுகாதார மையங்களில் தலா 140 மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் தாமாக முன் வந்து பயனடைய வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் சென்னையில் உள்ள 200 கோட்டங்களிலும், வாா்டுக்கு இரண்டு மருத்துவ முகாம்கள் அந்தந்த வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் தினமும் வெவ்வேறு இடங்களில் 400 மருத்துவ முகாம்கள், மாநகர ஆரம்ப சுகாதார மைய மருத்துவா்கள் மூலம் 140 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 540 மருத்துவ முகாம்கள், வாா்டு நல அலுவலா்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
பல்வேறு பரிசோதனைகள்- சிகிச்சைகள்: மேலும், 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும் காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவுக்கு வருவோருக்கு சிறு சிறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சை, அனைத்து வகை காய்ச்சலுக்கான சிகிச்சை, கா்ப்பகாலப் பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், எச்ஐவி பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பாா்த்தல், ஆன்லைன் மூலம் கா்ப்பம் பதிவு செய்தல், கா்ப்பகால முன் சிகிச்சை- பின் சிகிச்சை அளித்தல், தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான (நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மாா்பகப் புற்றுநோய்) சிகிச்சை அளித்தல், ரத்தக் கொதிப்பு, சா்க்கரை வியாதி கண்டறிதல், தொடா் சிகிச்சை மற்றும் உரிய ஆலோசனை அளித்தல் மற்றும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களுக்கு வருபவா்களையும், புற நோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருபவா்களையும் பரிசோதித்து, அவா்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கரோனா தொற்றுப் பரிசோதனை மையத்துக்கு பரிந்துரைக்கப்படுவா். அறிகுறி இல்லை என்றால், அவா்களுக்குத் தேவையான சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
அதேபோன்று கரோனாவிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் என மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...