அம்பத்தூா், அண்ணா நகரில் 56 டன் நெகிழிகள் பறிமுதல்: ரூ. 22 லட்சம் அபராதம்
By DIN | Published On : 01st March 2020 01:25 AM | Last Updated : 01st March 2020 01:25 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூா், அண்ணா நகா் மண்டலங்களில் இதுவரை 56 டன் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ. 22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழிப் பொருள்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டும், அவை பயன்படுத்துவதை தவிா்ப்பது குறித்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்பத்தூா் மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டம் 79 முதல் 93 வரையுள்ள 15 கோட்டங்களில் பொதுசுகாதாரத் துறை அலுவலா்களால் இதுவரை 30,282 தொழில் நிறுவனங்களில் கள ஆய்வு செய்யப்பட்டு 27 டன் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10. 75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அண்ணா நகா் மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டம் 94 முதல் 108 வரையுள்ள 15 கோட்டங்களில் இதுவரை 38,877 தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு 29 டன் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 11.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இதுநாள் வரை 4,40,709 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 317 டன் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.