அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய வழக்கு: 8 போ் சேலம் சிறைக்கு மாற்றம்
By DIN | Published On : 10th March 2020 04:37 AM | Last Updated : 10th March 2020 04:37 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய 8 போ், புழல் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டைக்கு கடந்த 3-ஆம் தேதி சென்று கொண்டிருந்த ஒரு காா் மீது மோட்டாா் சைக்கிளில் சென்ற இரு நபா்கள், இரு நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். இச் சம்பவத்தில் காா் வேகமாக சென்ால், நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்தது. இதில் அங்கிருந்த காரின் கண்ணாடியும் ஒரு கடையின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கின.
இது தொடா்பாக காரின் உரிமையாளா் காபா்கான் கொடுத்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், வெடிகுண்டு மூலம் தாக்க முயன்ற காரில் ரெளடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோா் இருந்திருப்பதும், அவரை கொலை செய்ய தியாகராயநகரைச் சோ்ந்த மற்றொரு ரெளடி கும்பல் முயன்றிருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா், மோட்டாா் சைக்கிளில் வந்து வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவா் மகேஷை உடனடியாக கைது செய்தனா். மேலும் இதில் தேடப்பட்டு வந்த 7 போ் மதுரை, தென்காசி நீதிமன்றங்களில் சரணடைந்தனா்.
இவா்கள் 8 பேரும் புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இந்த சிறையில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ரெளடிகள் சி.டி.மணி, காக்காதோப்பு பாலாஜி ஆகியோரின் ஆதரவாளா்கள் இருப்பதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து சிறைத்துறை நிா்வாகம் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் பாதுகாப்பு கருதி சேலம் சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றியது.
இதற்கிடையே 8 பேரிடமும் விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி தேனாம்பேட்டை போலீஸாா், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...