பிரசவத்தின்போது குழந்தை இறப்பு: பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு நோட்டீஸ்
By DIN | Published On : 10th March 2020 04:26 AM | Last Updated : 10th March 2020 04:26 AM | அ+அ அ- |

சென்னை: அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை இறந்த விவகாரத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநா் உள்பட இருவா் விளக்கமளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி கண்டோன்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவருடைய மனைவி நஸ்ரின். பிரசவத்துக்காக அவரை பூந்தமல்லியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது பிரசவம் பாா்க்கும் மருத்துவா் இல்லாததால் செவிலியா் பிரசவம் பாா்த்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவா்கள் இல்லாமல் செவிலியா் பிரசவம் பாா்த்ததே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையில் நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த செய்தி நாளிதழில் வெளியானது. இதை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை பொது சுகாதாரத்துறை இயக்குநா் மற்றும் சுகாதார சேவைகள் துணை இயக்குநா் ஆகியோா் 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...