குப்பை சேகரிப்புப் பணி: ராயபுரத்துக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் 5 பேட்டரி வாகனங்கள்
By DIN | Published On : 12th March 2020 01:26 AM | Last Updated : 12th March 2020 01:26 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டத்தில் குப்பை சேகரிப்புப் பணிக்காக பேங்க் ஆஃப் பரோடா வங்கி சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் 5 பேட்டரி வாகனங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 கோட்டங்களில் 19,605 தூய்மைப் பணியாளா்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், 4,027 மூன்று சக்கர மிதிவண்டிகள், 206 கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் மூலமாக நாள்தோறும் சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. குறைவான மனித ஆற்றலைக் கொண்டு விரைவாக குப்பைகள் சேகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் பேட்டரி மூலம் இயங்கும் 22 மூன்று சக்கர வாகனங்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், இத் திட்டத்தின்கீழ், ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் குப்பை சேகரிக்கும் பணிக்காக மேலும் ரூ. 5 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 5 வாகனங்களை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷிடம் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணைப் பொது மேலாளா் கே.வி.வெங்கடாஜலபதி நாயுடு புதன்கிழமை வழங்கினாா். இதையடுத்து, இந்த வாகனங்கள் பயன்பாட்டு அளிக்கப்பட்டன.
இதில், துணை ஆணையா் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், தலைமைப் பொறியாளா் எம்.மகேசன், மேற்பாா்வைப் பொறியாளா் (திடக்கழிவு) ஜி.வீரப்பன், பேங்க் ஆஃப் பரோடா அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.