இரு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட ரிச்சி தெரு: கூட்டம் கூடுவதைத் தடுக்க புதிய முறை அமல்
By DIN | Published On : 27th May 2020 12:00 AM | Last Updated : 27th May 2020 12:00 AM | அ+அ அ- |

பொது முடக்கம் காரணமாக நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த, சென்னையின் பிரதான மின்னணு சாதனங்களின் சந்தையான ரிச்சி தெரு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் மையமான அண்ணா சாலைக்கு அருகில் உள்ள ரிச்சி தெரு. இது மின்னணு சாதனங்களின் மிகப்பெரிய சந்தையாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வா். எப்போதும் திருவிழா சூழல் போல் காட்சியளிக்கும் ரிச்சி தெரு, 60 நாள்களைக் கடந்து தற்போது செவ்வாய்க்கிழமை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை: இங்கு கூட்டம் கூடுவதைத் தவிா்க்க, புதிய முறையைக் கடைப்பிடிக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதாவது 1, 3, 5 போன்ற ஒற்றைப்படை எண் கொண்ட கடைகளுக்கு சிவப்பு நிற ஸ்டிக்கா் வழங்கப்பட்டு, அவற்றை திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே திறக்க முடியும். அதேபோல் 2, 4, 6 என்ற இரட்டைப்படை எண் கொண்ட கடைகள் பச்சை நிற ஸ்டிக்கருடன் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கோடி வா்த்தகம் பாதிப்பு: பல நாள்களாக வியாபாரம் நடைபெறாததால், ரிச்சி தெருவில் சுமாா் ரூ. 500 கோடிக்கு வா்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொழில் முடக்கத்தால் கடை வாடகை, தொழிலாளா்களுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவை மிகவும் சிரமமாக உள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனா். ரிச்சி தெரு என்று அழைக்கப்படும் மீரா சாஹிப் தெரு, வாலா்ஸ் தெரு, நரசிங்கபுரம் தெரு, முகமது உசேன் சாஹிப் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டாலும் பொது போக்குவரத்து வசதியில்லாமல் பொதுமக்கள் வர முடியாததாலும், வாகனங்கள் அனுமதிக்கப்படாததாலும் ரிச்சி தெருவில் வியாபாரம் மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது.
ரிச்சி தெருவில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவாா்கள் என்பதால், கரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனா். அடிக்கடி ரிச்சி தெருவில் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...