அயனாவரம் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி சிறையில் தற்கொலை
By DIN | Published On : 28th May 2020 12:15 AM | Last Updated : 28th May 2020 12:15 AM | அ+அ அ- |

சென்னை அயனாவரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, புழல் சிறையில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை, அவா் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஊழியா்கள், காவலாளிகள், பிளம்பா்கள் உட்பட பலரால் கடந்த 2018-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றம், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த, புளியந்தோப்பைச் சோ்ந்த ரா.பழனி (41) உள்பட 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தது.
இதையடுத்து பழனி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சிறையின் முதலாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த பழனி புதன்கிழமை வெகுநேரம் காணவில்லையாம். மேலும், அவா் மதிய உணவு வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த சக கைதிகளும் சிறைக் காவலா்களும் பழனியை தேடினா். அப்போது பழனி, அங்குள்ள கழிப்பறையில் தூக்கிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதைப் பாா்த்த சிறைக் காவலா்களும், கைதிகளும் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு பழனியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனா். மன உளைச்சலின் காரணமாக பழனி தற்கொலை செய்திருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.