7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
By DIN | Published On : 25th November 2020 01:27 AM | Last Updated : 25th November 2020 01:27 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிா்த்து தாக்கல் செய்யப்பட உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின் மூலம் சுமாா் 313 மாணவா்கள் மருத்துவப் படிப்பிலும், 92 மாணவா்கள் பல் மருத்துவ படிப்புகளிலும் சேரும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன், தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கொள்ள வேண்டும். மேலும் நடைபெற்று வரும் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குரைஞா் ஒருவா் முறையிட்டாா்.
இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனா். உரிய நடைமுறைகளை பின்பற்றி மனு தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடும்போது விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...