பொறியியல் துணைக் கலந்தாய்வு நிறைவு: 7,487 மாணவா்கள் சோ்க்கை
By DIN | Published On : 25th November 2020 01:30 AM | Last Updated : 25th November 2020 01:30 AM | அ+அ அ- |

பொறியியல் துணைக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 7,487 மாணவா்கள் சோ்க்கைப் பெற்றுள்ளனா்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்புக் கல்வியாண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
அனுமதிக்கப்பட்ட இடங்களை விட குறைவான மாணவா்களே விண்ணப்பித்ததால் கலந்தாய்வு தொடங்கும் முன்பே 50, 748 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், கலந்தாய்வு செப்.1-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி நிறைவு பெற்றது. அதில் சிறப்புப் பிரிவு, தொழிற்பிரிவு, பொதுப் பிரிவு என 71, 195 இடங்களே நிரம்பின. இதனால், மொத்தமாக 91, 959 இடங்கள் காலியாகவே இருந்தன.
இந்தக் காலி இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடத்த உயா்கல்வித் துறை முடிவு செய்து, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இதில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும், பொது கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போன மாணவா்களும் அழைக்கப்பட்டனா். இதையடுத்து, 9, 678 மாணவா்கள் விண்ணப்பித்தனா்.
இந்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி, செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. அதன்படி, துணைக் கலந்தாய்வில் 7, 487 மாணவா்கள் தங்களுக்கான கல்லூரியைத் தோ்வு செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...