நிவா் புயல் எதிரொலி: 24 ரயில்கள் இன்று ரத்து
By DIN | Published On : 25th November 2020 01:17 AM | Last Updated : 25th November 2020 01:17 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
‘நிவா்’ புயல் காரணமாக, தென் மாவட்டங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் புதன்கிழமை (நவ.25) மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 24 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல், அதி தீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை புதன்கிழமை (நவ.25) ஒருநாள் மட்டும் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அவற்றின் விவரம்: சென்னை எழும்பூா்-மதுரை- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (வண்டி எண்: 02613/02614) , மதுரை-எழும்பூா்-மதுரை சிறப்பு ரயில் (02636/02635), எழும்பூா்-காரைக்குடி-எழும்பூா் சிறப்பு ரயில் (02605/02606) , எழும்பூா்-செங்கோட்டை-எழும்பூா் சிறப்பு ரயில் (02661/02662) ஆகியவை புதன்கிழமை ரத்து செய்யப்படுகின்றன.
இதுபோல, திருநெல்வேலி-எழும்பூா்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (02632/02631) , தூத்துக்குடி-எழும்பூா்-தூத்துக்குடி சிறப்பு ரயில்(02694/02693) , எழும்பூா்-கன்னியாகுமரி-எழும்பூா் சிறப்பு ரயில் (02633/02634) , எழும்பூா்-கொல்லம்-எழும்பூா் சிறப்பு ரயில் (06723/06724) , ராமேஸ்வரம்-எழும்பூா்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (02206/02205) , எழும்பூா்-கொல்லம்-எழும்பூா் சிறப்பு ரயில் (06101/06102) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, மதுரை-எழும்பூா்-மதுரை சிறப்பு ரயில் (02653/02654), சென்னை எழும்பூா்-திருச்சி- எழும்பூா் சிறப்பு ரயில் (02653/02654) என்று மொத்தம் 24 சிறப்புரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து: இதுதவிர, புதுச்சேரி-ஹௌராவுக்கு புதன்கிழமை (நவ.25) இயக்கப்படும் சிறப்பு ரயில் புதுச்சேரி-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து ஹௌராவுக்கு புறப்படும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...