சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டடப் பணிகள் மேற்கொள்ள தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 25th November 2020 01:31 AM | Last Updated : 25th November 2020 01:31 AM | அ+அ அ- |

சென்னை உயா்நீதிமன்றம்
சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டடப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞா் எஸ். வைத்தியநாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சிட்லப்பாக்கம் ஏரி 83 ஏக்கா் சுற்றளவு கொண்டது. தற்போது அந்த ஏரி 33 ஏக்கராக சுருங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஏரியை பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த ஆக்கிரமிப்புகளால் ஒவ்வோா் ஆண்டும் மழை காலங்களில் ஏரி நிரம்பி, குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. கடந்த 2015 -ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், இந்தப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த ஏரிப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் தவறிவிட்டனா்’ என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சுமாா் ஒரு லட்சம் சதுர அடி ஏரி நிலத்தை, நத்தம் புறம்போக்கு என வகை மாற்றி, அதனை மத்திய கிடங்கு கழகத்துக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனா். அதிகாரிகளின் இந்தச் செயல் ஆச்சரியம் அளிக்கிறது. எனவே, நிலத்தை வகை மாற்றியதை அதிகாரிகள் திரும்பப் பெறவேண்டும். இந்த நிலம் வகை மாற்றிய பின்னா், என்னென்ன பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது? என்பது குறித்து தமிழக அரசு முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்தப் பகுதியில் எந்தவொரு கட்டடப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. கட்டடப் பணிகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...