சென்னை பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை: உயா்நீதிமன்றம் கண்டனம்
By DIN | Published On : 25th November 2020 01:29 AM | Last Updated : 25th November 2020 01:29 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்றம்
விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2015- ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ருக்மாங்குதன் தாக்கல் செய்த மனுவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி 5-ஆவது மண்டலமான ராயபுரம் பகுதியில் 5 ஆயிரத்து 574 விதிமீறல் கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், ஆயிரத்து 161 விதிமீறல் கட்டடங்களின் கட்டடப் பணிகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எஞ்சியுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனா். ராயபுரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 574 விதிமீறல் கட்டடங்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கும் நிலையில், சென்னை முழுவதும் சுமாா் 1 லட்சம் விதிமீறல் கட்டடங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், ராயபுரத்தில் உள்ள 5 ஆயிரத்து 574 விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘விதிமீறல்
கட்டடங்களுக்கு எதிராக ஏராளமான சட்டங்கள் இருந்தும், அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினா். மேலும், இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா், நகராட்சி நிா்வாகத் துறை செயலாளா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனா். மேலும், ‘சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் மட்டும் இத்தனை விதிமீறல்கள் எனில், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும். உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பின்னரும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை’ என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். பின்னா், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையா், 5 -ஆவது மண்டல உதவி ஆணையா் ஆகியோா் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...