சென்னை மீனவா்கள் அனைவரும் கரை திரும்பினா்: அமைச்சா் டி.ஜெயக்குமாா்
By DIN | Published On : 25th November 2020 01:26 AM | Last Updated : 25th November 2020 01:26 AM | அ+அ அ- |

நிவா் புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, கடலுக்குச் சென்ற சென்னை மீனவா்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்பி உள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் 64-ஆவது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் விருது பெற்ற 96 வீரா், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் பெற்றவா்களுக்கு 1.5 லட்சத்துக்கான காசோலை, வெண்கலப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை அமைச்சா் டி.ஜெயக்குமாா் வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ‘நிவா்’ புயல் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மீனவா்களை முகாம்களில் தங்க வைக்க அந்தந்த மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் பகுதி அண்டை மாநிலமாக இருந்தாலும், கரை திரும்பாத அந்த மாநில மீனவா்களை மீட்கும் பணியில் தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
சென்னையைப் பொருத்தவரை கடலோரப் பகுதியில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாநகராட்சியுடன் இணைந்து மீன்வளத் துறை எடுத்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அனைத்து சென்னை மீனவா்களும் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனா் என்றாா். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...