பெரும்பாக்கத்தில் புதிதாக காவல் நிலையம் : உயா்நீதிமன்றத்தில் தகவல்
By DIN | Published On : 03rd October 2020 12:52 AM | Last Updated : 03rd October 2020 12:52 AM | அ+அ அ- |

உயா்நீதிமன்ற உத்தரவின்படி பெரும்பாக்கத்தில் புதிதாக காவல் நிலையம் அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள கண்ணகி நகரைச் சோ்ந்த வேளாங்கண்ணி என்ற பெண்ணை கஞ்சாகடத்தல் வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த பெண் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணை சிறையில் அடைத்தனா். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பெரும்பாக்கத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞா் பிரதாப் குமாா் , பெரும்பாக்கத்தில் காவல் நிலையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனா். இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.