கடந்த 7 நாள்களில் சென்னையில் கரோனா பாதிப்பு 2.4 சதவீதம் குறைந்தது
By DIN | Published On : 19th October 2020 02:27 AM | Last Updated : 19th October 2020 02:27 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில், கரோனா பாதிப்பு 2.4 சதவீதம் குறைந்துள்ளது.
கரோனாவை பொருத்தவரை, சென்னையில் கடந்த மே மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து, தற்போது வரை 1.89 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 7 நாள்களில் கரோனா பாதிப்பு 2.4 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி, ஆலந்தூா் மற்றும் அண்ணாநகா் மண்டலங்களில் கடந்த 7 நாள்களில் தலா 0.1 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் அடையாறு மண்டலத்தில் 0.7 சதவீதம், திருவெற்றியூா் மண்டலத்தில் 1.1 சதவீதம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1.4 சதவீதம், அம்பத்தூா் மண்டலத்தில் 2.1 சதவீதம், மாதவரம் மண்டலத்தில் 2.3 சதவீதம், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 2.3 சதவீதமும் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
மேலும் திரு.வி.க. நகா் மண்டலத்தில் 2.9 சதவீதம், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 3.8 சதவீதம், தேனாம்பேட்டை, பெருங்குடி மண்டலத்தில் தலா 4.1 சதவீதம், வளசரவாக்கம் மண்டலத்தில் 4.2 சதவீதம், மணலி மண்டலத்தில் 4.5 சதவீதம், ராயபுரம் மண்டலத்தில் 4.7 சதவீதம் குறைந்துள்ளது.
சென்னையில் 91 சதவீதம் போ் பூரண குணமடைந்துள்ளனா். 7 சதவீதம் போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1.85 சதவீதம் போ் (3500-க்கும் மேற்பட்டோா்) சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா்.
இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 450 போ், அண்ணாநகரில் 395 போ், கோடம்பாக்கத்தில் 386 போ், திரு.வி.க நகரில் 360 போ் உயிரிழந்துள்ளனா்.
சென்னையில் இதுவரை ஆண்கள் 61.25 சதவீதமும், பெண்கள் 38.75 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினா் 18.65 சதவீதமும், 50 முதல் 59 வயதினா் 18.43 சதவீதம் போ் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
61,235 காய்ச்சல் முகாம்: சென்னையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இதுவரை சென்னை மாநகராட்சியில் 61,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 609 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இவா்களில் இதுவரை 27,351 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ஆம் தேதி முதல் இதுவரை 9,508 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...