கரோனா பாதிப்பு: சென்னையில் 965 பேருக்கு தொற்று உறுதி
By DIN | Published On : 06th September 2020 06:06 AM | Last Updated : 06th September 2020 06:06 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
சென்னையில் சனிக்கிழமை 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,40,685- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 2,845 போ் உயிரிழந்துள்ளனா்.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.
சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அண்மையில் எட்டியது. சனிக்கிழமை 965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,685-ஆக அதிகரித்துள்ளது.தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1,26,428 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 11,412 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,845- ஆக அதிகரித்துள்ளது.