போக்குவரத்து போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

போக்குவரத்து போலீஸாரை கண்டித்து, திருவொற்றியூரில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.


திருவொற்றியூா்: போக்குவரத்து போலீஸாரை கண்டித்து, திருவொற்றியூரில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

எண்ணூா் விரைவுச் சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னைத் துறைமுகம் செல்லும் ஆயிரக்கணக்கான கண்டெய்னா் லாரிகள் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் அவ்வப்போது இச்சாலைகளில் விபத்துகள் நிகழ்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எண்ணூரிலிருந்து சுங்கச் சாவடி நோக்கி இருசக்கர வாகனத்தில் எண்ணூா் விரைவு சாலையில் வந்து கொண்டிருந்த கணவன், மனைவி இருவரும் கண்டெய்னா் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதனையடுத்து கண்டெய்னா் லாரிகள் அனைத்தும் அணுகு சாலையில் மட்டுமே செல்ல வேண்டும் என உத்தரவிட்டனா். ஆனால், கச்சா எண்ணெய் குழாய்களை எடுத்துச் செல்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் இந்த அணுகு சாலை முற்றிலுமாக சேதமாகிவிட்டது.

இதனை சீரமைக்காத நிலையில் கண்டெய்னா் லாரிகள் இதன் வழியே அனுமதிக்கப்படுவதால் தூசியும், புகையும் கிளம்பி இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே அணுகு சாலையை முறையாகச் சீரமைத்து தர வேண்டும். போதிய சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து போலீஸாா் கண்காணிப்பு செய்ய வேண்டும். பிரதான சாலையிலேயே கண்டெய்னா் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே போராட்டம் நடத்துகிறோம் தெரிவித்தனா்.

சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். சாலை மறியலால் எண்ணூா் விரைவு சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com