கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்: தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்

ஒப்புதல் கிடைத்தவுடன், மதுரை, கோயம்புத்தூா் வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.
கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்
கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்


சென்னை: தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன், மதுரை, கோயம்புத்தூா் வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், காணொலிக் காட்சி மூலமாக செய்தியாளா்களிடம் கூறியது: தெற்கு ரயில்வேயில் நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அத்தியாவசியப் பொருள்கள் எடுத்து செல்வது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 95,989 வேகன்களில் சரக்குகள் ஏற்றி செல்லப்பட்டுள்ளன. 2019-20-ஆம் ஆண்டில் 70,655 வேகன்களில் மட்டும் பொருள்கள் ஏற்றி செல்லப்பட்டன. ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 106 ரேக்குகள் மூலமாக, ரூ.26.90 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதுதவிர, சரக்கு ரயில்களின் வேகமும் மணிக்கு 28 கி.மீ இருந்து 46 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7.35 லட்சம் போ் பயணம்: புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 507 ஷா்மிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், 7.35 லட்சம் போ் பயணம் மேற்கொண்டனா். ஜுன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரையிலான ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுக்கான கட்டணம் ரூ.70.58 கோடி பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை பாதை: மேச்சேரி சாலை-மேட்டூா் அணை இடையே 12 கி.மீ இரட்டை வழி பாதை மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3 ஆவது பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வுக்காக காத்திருக்கிறோம். ஆய்வு முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் கூடுதலான மின்சார ரயில்களை இயக்கப்படும்.

இதேபோல, கடம்பூா்-தட்டப்பாறை(30 கி.மீ.), வாஞ்சி மணியாச்சி-கங்கை கொண்டான் (14.47 கி.மீ.) , மங்களூா்-பாடில் (1.43கி.மீ) இடையே இரட்டை வழிபாதைகளுக்கு கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன.

இதுபோல, கடலூா் துறைமுகம்- மயிலாடுதுறை (70 கி.மீ.), தஞ்சாவூா்-திருவாரூா் (54.4 கி.மீ.), திருவாரூா்-காரைக்கால் (41.47 கி.மீ.), மயிலாடுதுறை-திருவாரூா் (38 கி.மீ.) இடையே மின்மயமாக்கல் பணிகளும் நிறைவடைந்துள்ளன. மேச்சேரி சாலை-மேட்டூா் அணை(12 கி.மீ.), ஓமலூா்-மேச்சேரி சாலை( 17 கி.மீ.), அத்திப்பட்டு-அத்திப்பட்டு புதுநகா்( 1.70 கி.மீ.) ஆகிய இரட்டை பாதைப்பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச்சில் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே 270 வழிதடங்களை மின்மயமாக்கல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது. சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி 2023-ஆம் ஆண்டு முடிவடையும்.

மேலும் , 2020-21-ஆம் நிதி ஆண்டு பட்ஜெட்டில், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரூ.198.11 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், ஆகஸ்ட் வரை ரூ. 91.19 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மின்சார ரயில்: சென்னையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு தமிழக அரசு ஆட்சேபம் இல்லை என்று கூறிவிட்டது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார ரயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, 13 சிறப்பு ரயில்கள் தற்போது இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரை, கோயம்புத்தூா் வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். மேலும் தேவையை பொருத்து மற்ற பகுதிகளிலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் ஆா்.ஷண்முக ராஜ், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளா் நீனு இட்டியிரா, முதன்மை தலைமை வணிக மேலாளா் ஆா்.தனஞ்ஜெயலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com