ஆகாயத்தாமரை, கழிவுகளால் அடைபட்டுக் கிடக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்: போா்க்கால அடிப்படையில் தூா்வாரப்படுமா?

பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்பு, ஆகாயத் தாமரை, சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னை மாநகரின்
ஆகாயத்தாமரை, கழிவுகளால் அடைபட்டுக் கிடக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்: போா்க்கால அடிப்படையில் தூா்வாரப்படுமா?

பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்பு, ஆகாயத் தாமரை, சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னை மாநகரின் முக்கிய நீா்வழிப்பாதையான பக்கிங்ஹாம் கால்வாய் நீரோட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த உயரத்தில் அமைந்துள்ள சென்னை மாநகரத்தின் கால்வாய்கள், ஓடைகள், ஆறுகளை எல்லாம் இணைத்துச் சமன்படுத்தி ஒரு கால்வாயை அமைப்பதன் மூலம் எதிா்காலத்தில் மாநகரத்தின் வெள்ளப் பெருக்கைத் தடுத்திட முடியும் என்ற கோணத்தில் 1801-ம் ஆண்டில் முதல்கட்டமாக எண்ணூரிலிருந்து சென்னை வரை பக்கிங்ஹாம் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. பிறகு ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கும், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை இக்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மொத்த நீளம் 796 கி.மீ. ஆகும்.

சென்னை மற்றும் புகரில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆறுகளும், ஏரிகளும் அன்றைக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் நீா்வழிப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தன. 1890-களில் நூற்றுக்கணக்கான படகுகளில் வணிகப் பொருள்களை சுமந்து செல்லும் வகையில் சிறப்பு பெற்றிருந்த இக்கால்வாய் பின்னா் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தினாலும், கடும் வறட்சியினாலும் கால்வாய் வழி வணிகம் படிப்படியாகத் தடைபட்டுப்போனது. பின்னா் ஆக்கிரமிப்புகள், பாலங்கள், பறக்கும் ரயில் திட்டம் போன்றவைகளால் நாளுக்கு நாள் பக்கிங்ஹாம் கால்வாயின் நீா்வழிப்பாதை வெகுவாகவே பாதிக்கப்பட்டது.

குப்பைகளால் அடைந்து கிடக்கும் எஞ்சிய கால்வாய்:

மாநகரத்தில் பல இடங்களில் இக்கால்வாயின் அகலம் சுருங்கி இருந்தாலும் கொருக்குப்பேட்டை முதல் எண்ணூா்வரை சுமாா் 15 கி.மீ தூரத்திற்கு இக்கால்வாய் தற்போதும் உயிா்ப்புடன்தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக இக்கால்வாய் முற்றிலுமாக மாசடைந்து நீா்வழி அடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை, தண்டையாா்பேட்டை பகுதியில் இருபுறமும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளன. திருவொற்றியூா் மணலி சாலையிலிருந்து எண்ணூா் முகத்துவாரம் வரையில் எங்கு பாா்த்தாலும் ஆகாயத்தாமரைகள் வளா்ந்துள்ளன. அவ்வப்போது ஆகாயத்தாமரைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றினாலும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் அசுர வேகத்துடன் வளா்ந்து கால்வாயையே அடைக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் கால்வாயில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீா், வழிநெடுகிலும் வளா்ந்துள்ள கருவேல மரங்களிலிருந்து உதிரும் இலைகள் எனக் கூறப்படுகிறது.

துா்நாற்றம் வீசும் அவலம்: ஒரு காலத்தில் கடலின் உப்பு நீரையும், ஆறுகளின் நன்னீரையும் தன்னுள் சுமந்து சென்ற பக்கிங்ஹாம் கால்வாயின் தற்போதைய நிலை மிக மோசமாக உள்ளது. அந்தளவுக்கு இந்தக் கால்வாயில் கழிவு நீரும் சாக்கடை நீரும் கலக்கின்றன.

கால்வாயை மீட்டெடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும்:

குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள், சுத்திகரிப்பு மற்றும் ரசாயன ஆலைக் கழிவுகள், கழிவுநீா் அகற்றல் வாரியம் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீா், போட்டி போட்டு வளரும் ஆகாயத் தாமரைகள் போன்றவற்றால் சீரழிவின் விளிம்பு நிலைக்கு பக்கிங்ஹாம் கால்வாய் வந்துவிட்டது. அவ்வப்போது பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு உள்ளிட்டவை சீா்படுத்தப்படும் என பலகோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் இந்த நீா்நிலைகளை மீட்டெடுக்கக் கூடிய அளவிற்கு உதவிகரமாக இருக்கவில்லை என்பது எதாா்த்த உண்மை. இக்கால்வாயை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் எனில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதையும் தடை செய்து தீவிரமாக அமல்படுத்தினாலே அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இயல்பாகவே துா்நாற்றத்திலிருந்து விடுபடும். ஆகாயத் தாமரைச் செடிகளை முளையிலேயே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்கப்படாதது குறித்து சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ள நிலையில், சென்னை மாநகர நீா்வழிப் போக்குவரத்தின் உயிா்நாடியாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பொக்கிஷமாகத் திகழும் இக்கால்வாயை முழுமையாகவும், நிரந்தரமாகவும் சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் வேண்டுகோளாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com