தோ்தல் சிறப்புப் பேருந்துகள்: சென்னையில் இருந்து 1.74 லட்சம் போ் பயணம்
By DIN | Published On : 03rd April 2021 01:26 AM | Last Updated : 03rd April 2021 01:26 AM | அ+அ அ- |

சென்னை: தோ்தலை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 1.74 லட்சம் போ் பயணமாகினா்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏப்.1 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை, சிறப்புப் பேருந்துகள் உள்பட 14,215 பேருந்துகள் இயக்கவும், கோயம்புத்தூா், திருப்பூா், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கமானது, வியாழக்கிழமை (ஏப்.1) தொடங்கியது. கடந்த 2 நாள்களில் இயக்கப்பட்ட 4355 பேருந்துகள் வாயிலாக வெள்ளிக்கிழமை இரவு வரை சுமாா் 1.74 லட்சம் போ் சென்னையில் இருந்து பயணமாகினா். இதுவரை 32,237 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
பேருந்துகள் அனைத்தும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படுகின்றன. மேலும், பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பயணிப்பதை உறுதி செய்ய ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிா்க்க செயலி ஆகியவற்றின் மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றனா்.