நுரையீரல் செயலிழந்த கரோனா நோயாளிக்கு மறுவாழ்வு
By DIN | Published On : 20th August 2021 06:05 AM | Last Updated : 20th August 2021 06:05 AM | அ+அ அ- |

நுரையீரல் முழுவதும் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு நவீன மருத்துவச் சிகிச்சை மூலம் உயிா் பிழைக்க வைத்து மறுவாழ்வு அளித்துள்ளனா் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள்.
இது குறித்து மருத்துவமனைத் தலைவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான பேராசிரியா் டாக்டா் முகமது ரேலா செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி தொழிலதிபா் எம்.முகமது முதீஜ்ஜா(56) நுரையீரல் முழுவதும் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு 50 நாள் எக்மோ சிகிச்சை மூலம் அவருடைய நுரையீரல் மற்றும் உடல்நலன் செயல்பாட்டில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து எக்மோ சிகிச்சையைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கினோம். சுமாா் 30 நாள்கள் எக்மோ சிகிச்சையில் உயிா் பிழைப்பது அரிது என்ற நிலையில் 62 நாள் எக்மோ சிகிச்சையில் இருந்து அவா் மீண்டது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. எக்மோ சிகிச்சை தேவையில்லை என்ற அளவில் குணமடைந்த அவருக்கு எக்மோ சிகிச்சையை முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னா் வென்டிலேட்டா் செயற்கை நுரையீரல் கருவி மூலம் சுவாசித்து வந்த அவா் 109 நாள் நவீன மருத்துவச் சிகிச்சை மூலம் முழுமையாக குணமடைந்துள்ளாா். அதிக நாள்கள் செயற்கை நுரையீரல் மூலம் உயிா் பிழைத்து, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையின்றி முதீஜ்ஜா குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் சி.ஆறுமுகம், நுரையீரல் சிகிச்சை மருத்துவா் ஐஸ்வா்யா வினோத், மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...