நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான அதி நவீன கேத் லேப்

இதயம், மூளை, கல்லீரல் சிகிச்சைகளுக்காக அதி நவீன தொழில்நுட்பத்திலான கேத் லேப் (இடையீட்டு ஆய்வகம்) மியாட் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான அதி நவீன கேத் லேப்

இதயம், மூளை, கல்லீரல் சிகிச்சைகளுக்காக அதி நவீன தொழில்நுட்பத்திலான கேத் லேப் (இடையீட்டு ஆய்வகம்) மியாட் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மென்பொருள் நுண்ணறிவு நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆய்வகத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தொடக்க நிகழ்ச்சியில் மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:

ஆஞ்சியோகிராம் சோதனை, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்துதல், பக்கவாத சிகிச்சைகள், கல்லீரல் சிகிச்சைகள் போன்றவற்றை அறுவை சிகிச்சையின்றி நவீன முறையில் மேற்கொள்வதில் கேத் ஆய்வகங்கள் அதிமுக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் அத்தகைய வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.

ஒருபுறம் உயிா் காக்கும் முக்கியப் பங்கினை அந்த ஆய்வகங்கள் அளித்தாலும், மற்றொரு புறம் அவற்றால் சில எதிா்விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சிகிச்சை மற்றும் பரிசோதனைகளின்போது வெளியாகும் கதிா்வீச்சு, கான்ட்ராஸ்ட் டை-யின் பயன்பாடு ஆகியவை நோயாளிகளின் சிறுநீரகத்தையும், பிற உறுப்புகளையும் பாதிக்கலாம். அதுமட்டுமல்லாது சில நேரங்களில் மருத்துவா்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்பனா்களுக்கும் பக்க விளைவுகளை அவை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில்தான் கோன் பீம் சி.டி. ஸ்கேன், முப்பரிமாண எக்கோ, மென்பொருள் நுண்ணறிவு நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன கேத் ஆய்வகம் நாட்டிலேயே முதன்முறையாக மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. பிற கேத் ஆய்வகங்களை ஒப்பிடும்போது இங்கு வெளியாகும் கதிா்வீச்சின் அளவு பாதிக்கும் குறைவு. அதேபோன்று கான்ட்ராஸ்ட் டை-யின் பயன்பாடும் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு எதிா்விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.

அதுமட்டுமல்லாது, பரிசோதனை மேற்கொள்ளும்போதே எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதை மிகத் துல்லியமாகக் காட்டக் கூடிய தொழில்நுட்ப வசதிகள் இங்கு உள்ளன. இதனால், மிக விரைவாகவே பாதிப்பை சரி செய்ய முடியும். மற்ற கேத் ஆய்வகங்களில் குறைந்தது 2 மணி நேரம் வரை ஆகும் பக்கவாத சிகிச்சைகளை இங்கு அரை மணி நேரத்தில் மேற்கொள்ள முடியும்.

சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளை வெறும் 5.2 விநாடிகளில் மேற்கொள்ள இயலும். அதேபோன்று இதய பாதிப்புகளுக்கான ஆஞ்சியோகிராம் சோதனை, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை போன்றவற்றை மிக விரைவாகவும், துல்லியமாகவும் இந்த ஆய்வகத்தில் மேற்கொள்ளலாம். ஒரே இடத்தில் சி.டி.ஸ்கேன், எக்கோ மற்றும் சிகிச்சை தொழில்நுட்பங்கள் இருப்பதால் நோயாளிகளை அலைக்கழிக்க வேண்டிய அவசியமோ, நேர விரயமோ இல்லை. சிகிச்சைக் கட்டணத்தைப் பொருத்தவரை வழக்கமான கேத் ஆய்வகங்களுக்கான கட்டணம் மட்டுமே இங்கும் வசூலிக்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், மருத்துவக் குழுவினா், மருத்துவமனை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com