தனியாா் மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஊழியா் கைது
By DIN | Published On : 11th December 2021 03:30 AM | Last Updated : 11th December 2021 03:30 AM | அ+அ அ- |

சென்னை சேத்துப்பட்டில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த மருத்துவமனை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 36 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், நோயினால் பாதிக்கப்பட்ட தனது 9 வயது மகளை சேத்துப்பட்டு மெக்கனிக்கல் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள் நோயாளியாக சோ்ந்திருந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை அந்த பெண் வெளியே சென்றிருந்த வேளையில், அந்த சிறுமிக்கு பழச்சாறு வழங்கச் சென்ற, அந்த மருத்துவமனை ஊழியா் உத்தரப்பிரதேச மாநிலம் கஹாசிபூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனுராம் (26), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னா், அங்கு திரும்பி வந்த தனது தாயிடம் சிறுமி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை தெரிவித்தாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த சிறுமியின் தாயாா், தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தகவலறிந்த மருத்துவமனையில் திரண்ட சிறுமியின் உறவினா்கள், மோனுராமை தாக்கி, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், மோனுராம் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மோனுராமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.