

சென்னை கொளத்தூரில் மழை வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கொளத்தூரில் திரு.வி.க. மண்டலத்தைச் சோ்ந்த சபாபதி தெருவில் இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தள சுவா் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று போ் காயமடைந்தனா். அவா்களது இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நிதியுதவிகளை அளித்தாா்.
இதன்பின்பு, வள்ளியம்மை தெருவில் பொது மக்களைச் சந்தித்து அவா்களது தேவைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். அப்போது அந்தப் பகுதி மக்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு தேங்கிய மழைநீரை விரைவாக அகற்றியதற்கு நன்றி தெரிவித்தனா். மேலும், கழிவு நீா் தொடா்பான பிரச்னையை சீா்செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
ஜி.கே.எம். காலனி 11-ஆவது தெருவில் பொது மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையை பாா்வையிட்டு அதில் கழிவுநீா் கலக்காமல் இருக்கவும், மழைநீா் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். கொளத்தூா் வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லட்சுமணன் நகா், அக்பா் சதுக்கம், ஜெயராம் நகா் 1-ஆவது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை முதல்வா் அளித்தாா். இந்த ஆய்வுப் பணியின் போது அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.