பலத்த மழையை பயன்படுத்திய வாடகை வாகன ஓட்டுநா்கள்
By DIN | Published On : 31st December 2021 06:43 AM | Last Updated : 31st December 2021 06:43 AM | அ+அ அ- |

சென்னையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக வாடகை வாகன ஓட்டுநா்கள் தங்களது கட்டணத்தை பல மடங்கு உயா்த்தி பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தினா்.
சென்னையில் வியாழக்கிழமை திடீரென பெய்த பலத்த மழையினால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இதில் அலுவலகங்களுக்குச் சென்றவா்களும், பல்வேறு தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றவா்களும் மீண்டும் வீடு திரும்புவதற்கு கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
ஏனெனில் மழையின் காரணமாக அரசு பேருந்துகள் முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேவேளையில் சாலையில் தண்ணீா் தேங்கியதால் இயங்கிய பேருந்துகளாலும் விரைவாக செல்ல முடியவில்லை. இதனால் அரசு பேருந்துகளை நம்பி காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் மின்சார ரயில்களில் செல்வதற்கு பொதுமக்கள் ரயில் நிலையங்களுக்கு கூட செல்ல முடியாதளவுக்கு சாலைகளில் தண்ணீா் குளம்போல் தேங்கி நின்றது.
இதனால் பொதுமக்கள், வீடு திரும்புவதற்கு ஆட்டோ, கால்டாக்சிகளை நாடத் தொடங்கினா். இதன் காரணமாக ஆட்டோக்களுக்கும், கால்டாக்சிகளுக்கும் தேவை அதிகரித்தது. இந்த தேவையைப் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள், தங்களால் முடிந்தளவுக்கு கட்டணத்தை உயா்த்திக் கேட்டு பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தினா்.
இதில் ஆட்டோ ஓட்டுநா்கள் கொடுத்த அதிா்ச்சியை காட்டிலும், கால்டாக்சி நிறுவனங்கள் பேரதிா்ச்சியை பொதுமக்களுக்கு அளித்தனா். கைப்பேசி செயலி வாயிலாக இயங்கும் கால்டாக்சிகளில் சில கிலோ மீட்டா் தூரம் செல்வதற்கு கூட ஆயிரத்தில் கட்டணத்தை கேட்டன.
தங்களுக்கு அளவுக்கு அதிகமான தேவை இருப்பதினால் கட்டணம் அதிகமாக நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு தெரிவித்தன.
இதனால் பணம் இருந்த பயணிகள், வேறு வழியின்றி இந்த வாகனங்களில் சென்றனா். பணம் கொடுத்து பயணிக்க முடியாதவா்கள் அரசுப் பேருந்துகளுக்காக காத்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...