பிரதமா் மோடி வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 14th February 2021 12:53 AM | Last Updated : 14th February 2021 12:53 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னைக்கு பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) வருவதையொட்டி, 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு புதிய திட்டங்களை தொடக்கி வைக்கிறாா்.
அவருடைய வருகையையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் சென்னைக்குள் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் வர அனுமதி கிடையாது. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயா் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி சாலை, அம்பேத்கா் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம். அண்ணா சாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸா் பென்னி சாலை, மாா்ஷல் சாலை, நாயா் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
தெற்கு கெனால் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம். இதே வழியிலேயே மாநகர பேருந்துகளும் செல்ல அனுமதிக்கப்படும்.