சுங்கச்சாவடி கட்டணத்தைத் தவிர்க்க அரசுப் பேருந்துகள் வழிமாற்றம்
By DIN | Published On : 18th February 2021 04:29 AM | Last Updated : 18th February 2021 04:29 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
சென்னை: சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் சில அரசுப் பேருந்துகள் வழி மாற்றம் செய்யப்பட்டன.
வானகரம் சுங்கச்சாவடி வாயிலாக அரசுப் பேருந்துகள் 50 முறை பயணிக்க ரூ.9800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 650 பேருந்துகளுக்காக ஒரு மாதம் சுமார் ரூ.61 லட்சம் போக்குவரத்துக் கழகங்கள் செலவு செய்கின்றன. சென்னையில் இருந்து புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளைப் பொருத்தவரை, ஒரு வாரத்துக்கே சுமார் 50 முறைக்கு மேல் இச்சுங்கச்சாவடி வழியாக செல்லக் கூடும்.
எனவே, சுங்கச்சாவடி இல்லாத வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை காலை வேளையிலேயே, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பேருந்து போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
இவ்வாறு, கடலூர், விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகளை இடைமறித்த போக்குவரத்து காவலர்களோ, புறவழிச்சாலை வழியாகச் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், ராகுல் காந்தி வருகையால் பாதுகாப்பு கருதி, விமான நிலையம் வழியே செல்ல வேண்டாம் என அவர்கள் நிலைமையைத் தெரிவித்துள்ளனர். ஆனால், வானகரம் சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், கிண்டி வழியாகவே பேருந்துகளை இயக்கக் கூறியதாக காவலர்களிடம் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை ஓரத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரும்புலியூர் - வண்டலூர் வழித்தடத்தில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்துத் துறையினர், காவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகே நகருக்குள் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 200 பேருந்துகள் மட்டுமே சோதனை அடிப்படையில் ஜிஎஸ்டி சாலை வழியாக இயக்கப்படுகிறது எனவும், காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G