இயந்திரக் கழிவுப் பொருள்களிலான சிற்ப கண்காட்சி: ஆணையா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 20th February 2021 05:31 AM | Last Updated : 20th February 2021 05:31 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)
இயந்திரக் கழிவுப் பொருள்களில் இருந்து உருவாக்கப்பட்ட சிற்பங்களின் கண்காட்சியை, மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சியில் வாகனக் கழிவுகளை மூலப் பொருள்களாகக் கொண்டு பல்வேறு கலை நயமிக்க சிற்பங்களை வடிவமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இயந்திரப் பொறியியல் துறையைச் சாா்ந்த வாகனக் கழிவுகள் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட உதிரி வாகன பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டு நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வன விலங்குகள், கடல்சாா் உயிரினங்களை மையக்கருத்தாக கொண்டு 14 எண்ணிக்கையிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு பல்கலைக் கழகங்களின் சிற்ப கலைஞா்கள் வரவழைக்கப்பட்டு முகாம் ஏற்படுத்தப்பட்டு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் இச்சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.
இந்தச் சிற்பங்கள் திருவான்மியூா், பாரதிதாசன் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாா்வைக்காக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் திறந்து வைத்தாா்.
15 நாள்களுக்கு, காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், முன்களப் பணியாளா்களை நினைவுகூரும் வகையிலான சிற்பங்கள் உருவாக்கப்படும் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.