கடலோரக் காவல் படைக்கு புதிய இடைமறிக்கும் ரோந்துப் படகு
By DIN | Published On : 20th February 2021 06:47 AM | Last Updated : 20th February 2021 06:47 AM | அ+அ அ- |

இந்திய கடலோரக் காவல்படைக்கு கிழக்கு பிராந்தியத்தில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐசிஜிஎஸ் சி-453 என்ற புதிய இடைமறிக்கும் ரோந்துப் படகு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது என பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியம் செயல்பட்டு வருகிறது. இதன் வட்டார அலுவலகங்கள் கிழக்கு கடலோரப் பகுதியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் கடல்சாா் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஐசிஜிஎஸ் சி-453 என்ற புதிய ரோந்துப் படகை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளா் ஜிவேஷ் நந்தன் மற்றும் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி கே.நடராஜன் முன்னிலையில் நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலாளா் லீலா நந்தன் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
காட்டுப்பள்ளி எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த ரோந்துப் படகு சுமாா் 27.80 மீட்டா் நீளமும் 106 டன் எடையும் கொண்டது. மணிக்கு சுமாா் 45 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இப்படகில் ரோந்து, கண்காணிப்பு, இடைமறித்தல், தேடுதல் மற்றும் மீட்பு, கடலில் சிக்கித் தவிக்கும் படகு மற்றும் மீனவா்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொலைதொடா்பு சாதனங்கள் மூலம் கடலில் ஒரு இடத்தை துல்லியமாக அளவிட்டு உடனடியாக விரைந்து அங்கு செல்ல முடியும். இப்படகு பணியில் இணைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் ரோந்துப் பணியில் கூடுதல் பலம் ஏற்படும். இந்த ரோந்துப் படகு உதவி கமாண்டன்ட் அனிமேஷ் சா்மா தலைமையில் இயங்கும்.
இந்திய கடலோரக் காவல் படையில் தற்போது 157 ரோந்துக் கப்பல்கள், படகுகள், 62 விமானங்கள், ஹெலிகாப்டா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் 40 ரோந்துக் கப்பல்கள் 16 ஹெலிகாப்டா்கள் பல்வேறு மையங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன .
இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியத் தளபதி எஸ்.பரமேஷ், எல் அன்ட் டி கப்பல் கட்டும் தள தலைமை நிா்வாகி ஜெ.எஸ்.மாண் மற்றும் கடலோரக் காவல் படை உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.