போலி இ-பயணச்சீட்டு விற்பனை: இருவா் கைது
By DIN | Published On : 20th February 2021 05:45 AM | Last Updated : 20th February 2021 05:45 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
தண்டையாா்பேட்டையில் கள்ளச்சந்தையில் போலியான இ- பயணச்சீட்டுகளை விற்பனை செய்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படை சிறப்பு அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் போலியான 1,500 இ - பயணச்சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
திருவொற்றியூா் பகுதியில் போலியான ரயில் பயணச்சீட்டு விற்பனை செய்வதாக சென்னை ரயில்வே கோட்ட முதன்மை ஆணையா் செந்தில் குமரேசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அந்த இடத்துக்குச் சென்று சோதனை நடத்த சென்னை தண்டையாா்பேட்டையில் இயங்கிவரும் ஆா்.பி.எஃப். சிறப்புப் படை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதையடுத்து, திருவொற்றியூா் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏஜென்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இச்சோதனையில் 15-க்கும் மேற்பட்டவா்களின் முகவரியைப் பயன்படுத்தி, போலியான 1,500 இ- பயணச்சீட்டுகள் வைத்திருந்தனா். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
கள்ளச்சந்தையில் போலியான இ-பயணச்சீட்டுகளை விற்பனை செய்தது தொடா்பாக திருவொற்றியூரை சோ்ந்த அந்நிறுவனத்தின் உரிமையாளா் வினோதன் மற்றும் ஊழியா் ஹரிஹரன் ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து போலியான 1500 இ -டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கணினி, இரண்டு செல்லிடப்பேசி, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். இருவரும் கைது செய்யப்பட்டனா்.