ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கரோனா: தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
By DIN | Published On : 21st February 2021 06:00 AM | Last Updated : 21st February 2021 06:00 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ரயில்வே பாதுகாப்பு படையில் 43 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு, கடந்த மாதத்தில் இருந்து தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக, சுகாதாரப்பணியாளா்கள், முன் களப்பணியாளா் என படிப்படியாக ஒவ்வொரு துறையைச் சாா்ந்தவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் மருத்துவப்பணியாளா்கள், முன்களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்புப்படையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. இதை சென்னை ரயில்வே கோட்டமுதுநிலை பாதுகாப்பு ஆணையா் செந்தில் குமரேசன் தொடங்கி வைத்தாா்.
சென்னை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், ரயில்வே பாதுகாப்புப்படையை சோ்ந்த 4 ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள் என்று 43 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்களுக்கும், அந்தந்தப் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையா் செந்தில் குமரேசன் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...