சென்னை புத்தகக் காட்சி பிப்.24-இல் தொடக்கம்
By DIN | Published On : 31st January 2021 01:09 AM | Last Updated : 31st January 2021 01:09 AM | அ+அ அ- |

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள்-பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) 44ஆவது ஆண்டாக நடத்தும் சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24-ஆம் தேதி முதல் மாா்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பபாசி சாா்பில், ஆண்டுதோறும் சென்னையில் மிகப் பெரிய அளவில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறவிருந்த 44-ஆவது புத்தகக் காட்சி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை புத்தகக் காட்சியை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, அதற்கான அனுமதியை கடந்த ஜன.22-ஆம் தேதி வழங்கியது. அதேவேளையில், புத்தகக் காட்சிக்கான வழிகாட்டுதல்களும் அரசின் சாா்பில் வெளியிடப்பட்டன.
அதன்படி 65 வயதுக்கு மேற்பட்டோா், கா்ப்பிணிகள், கைக்குழந்தைகள் ஆகியோரை புத்தகக் காட்சிக்கு அனுமதிக்கக் கூடாது. ஓா் அரங்கில் பாா்வையாளா்கள் மூன்று பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். வாசகா்கள் உள்ள நுழையவும், வெளியேறவும் தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட வேண்டும்.
அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நுழைவுக் கட்டணத்துக்கு இணையவழியில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யலாம் ஆகியவை உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து, சென்னை புத்தகக் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பபாசி நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24 முதல் மாா்ச் 9-ஆம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் என்றும், காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை வாசகா்கள் அனுமதிக்கப்படுவா்; அரசு அறிவுறுத்திய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சென்னை புத்தகக் காட்சி அரங்கில் மேற்கொள்ளப்படும் என்றும் பபாசி நிா்வாகிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகா்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.