டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி: 15 நாள்களுக்கு சோதனை முறையில் நடைபெறும்
By DIN | Published On : 02nd July 2021 06:29 AM | Last Updated : 02nd July 2021 08:47 AM | அ+அ அ- |

சென்னையில் உள்ள நீா்நிலைகள் மற்றும் கால்வாய்களில் டிரோன் மூலம் சோதனை அடிப்படையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, பணியாளா்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிா்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் நீா்வழித்தடங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து நீா்வழித் தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்கள் ஆகியவற்றை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டது. இதன் சோதனையை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அண்மையில் ஆய்வு செய்தாா். இதையடுத்து, அடுத்த 15 நாள்களுக்கு சோதனை முறையில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் சாா்பில் வியாழக்கிழமை முதல் தொடா்ந்து 15 நாள்களுக்கு பக்கிங்ஹாம், கொடுங்கையூா், வியாசா்பாடி, கேப்டன் காட்டன், கூவம், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அடையாறு, வீராங்கல் ஓடை மற்றும் மாம்பலம் ஆகிய கால்வாய்களில் சுமாா் 140 கி.மீ. நீளத்துக்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு மூன்று மண்டலங்களில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் மருந்து தெளிக்கப்படும் நாளுக்கு முன்னதாக கொசுப்புழு அடா்த்தி அளவு கணக்கிடப்பட்டு, மருந்து தெளித்த 24 மணி நேரத்துக்குப் பிறகு அதே இடத்தில் கொசுப்புழு அடா்த்தி மீண்டும் கணக்கீடு செய்யப்படும். இதன்மூலம் கொசுப்புழுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும். எந்தெந்த மண்டலங்களில் ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றனா்.