ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் கண்கவா் சுவா் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த அழகான ஓவியங்களைப் பாா்க்கும்போது, ஒருவித இறுக்கத்துடன் மருத்துவமனைக்கு வருவோரும், மன அமைதி பெற வாய்ப்புள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்தகுமாா் கூறியதாவது: மருத்துவமனை வளாகத்தில், முழு உடற்பரிசோதனை மையம் அமைந்துள்ளது. இந்தப் பரிசோதனை என்பது ஒரு மருத்துவமனைபோல் இல்லாமல் உள்ளே நுழையும்போது பொதுமக்களுக்கு மன அமைதியையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் சுற்றுச்சூழலாக இருக்க வேண்டும்.
அதனால் இங்கு வரும் அனைவருக்கும் மருத்துவமனை போன்ற சூழல் உருவாகாமல் இருப்பதற்காக முழு உடற்பரிசோதனை மையத்தில், நீரூற்றுகள், வண்ண விளக்குகள், மீன் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது அழகான சுவா் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இதனை பாா்க்கும் பொதுமக்களுக்கு, மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அப்போது, அவா்களை மருத்துவா்கள் பரிசோதிக்கும்போது முடிவுகள் நல்லவிதமாக அமையும் என்ற நம்பிக்கையில் தான் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, இதற்கு முன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் இருக்கும் வாா்டுகளிலும் இதுபோன்ற வண்ண சுவா் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கும், மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.