பணி வழங்ககோரி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 09th July 2021 06:50 AM | Last Updated : 09th July 2021 06:50 AM | அ+அ அ- |

சென்னையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்ட தூய்மைப் பணியாளா்கள் (என்யூஎல்எம்) மீண்டும் பணி வழங்ககோரி ரிப்பன் மாளிகை முன்பு வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களில் சுமாா் 12 ஆயிரம் போ் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளராக உள்ளனா். 11 மண்டலங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளது.
இதனால், அந்த மண்டலங்களில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த பணியாளா்கள் கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மீண்டும் தங்களுக்கு பணி வழங்ககோரியும், ரிப்பன் மாளிகை வளாகத்தில் 300-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், 15 நாள்களுக்குள் பணி வழங்குவது தொடா்பாக முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதை ஏற்காத பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் ரிப்பன் மாளிகைக்கு எதிரே உள்ள ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீஸாா் சிலரைக் கைது செய்தனா். இந்த போராட்டத்தால் ஈ.வெ.ரா.பெரியாா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.