தீவிர தூய்மைப் பணி: 4,479 டன் குப்பைகள் அகற்றம்
By DIN | Published On : 26th July 2021 04:51 AM | Last Updated : 26th July 2021 04:51 AM | அ+அ அ- |

சென்னையில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் 5 நாள்களில் 4,479 டன் குப்பைகள், கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 200 வாா்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகின்றன. இதில், மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும், மக்காத குப்பைகள் மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் முதல் மாநகராட்சி சாா்பில் தீவிர தூய்மைப் பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த மே மாதம் 10 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் 3,260 மெட்ரிக் டன் குப்பைகள், 10,085 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் என மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகளும், கடந்த ஜூன் மாதம் ஒரு வாரம் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணியில் 2,000 மெட்ரிக் டன் குப்பைகளும், 6,700 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் என மொத்தம் 8,700 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஜூலை 19-ஆம் தேதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை23) வரை 407 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,122 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 3,357 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் என மொத்தம் 4,479 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.