ரூ.9.2 கோடியில் அதிநவீன தெருநாய் இனப்பெருக்கக் கட்டுப்பாடு மையங்கள்
By DIN | Published On : 26th July 2021 04:49 AM | Last Updated : 26th July 2021 04:49 AM | அ+அ அ- |

சென்னை லாயிட்ஸ் சாலை, கண்ணம்மாபேட்டை உள்ளிட்ட 3 இடங்களில் ரூ. 9.2 கோடி மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் கொண்ட தெருநாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றால் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 15 மண்டலங்களில் தலா ஒரு நாய் பிடிக்கும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் தெருநாய்கள் பிடிக்கப்படுகின்றன. அவை மாநகராட்சியின் 3 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் மற்றும் 2 தொண்டு நிறுவனங்களின் நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு, பின்னா் அவை பிடிக்கப்பட்ட பகுதியிலேயே விடப்படுகின்றன.
சென்னை மாநகருக்கு உள்பட்ட பகுதியில் மட்டும் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதால், அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ் சாலை ஆகிய மூன்று இடங்களில் மாநகராட்சியின் தெருநாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது, இந்த மூன்று மையங்களையும் அதிநவீன வசதி கொண்ட மையங்களாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ரூ. 9.2 கோடி செலவில் நவீன மையம்: இதுகுறித்து மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், லாயிட்ஸ் சாலையில் இயங்கி வரும் தெருநாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையம் சிதிலமடைந்துள்ளதால் அதை இடித்துவிட்டு முதல்தளத்துடன் கூடிய புதிய மையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் கண்ணம்மாபேட்டை பகுதியில் உள்ள கூடுதலாக முதல் தளத்துடன் கூடிய தெருநாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையம் கட்டப்பட உள்ளது. அதிநவீன உபகரணங்களுடன் மொத்தம் ரூ. 9.2 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த மையங்கள் மூலம் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை விரைந்து செய்யப்படும் என்பதால் அதன் எண்ணிக்கையும் கட்டுக்குள் வைக்க முடியும். இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றனா்.
அஸ்தி வழங்க ஏற்பாடு: சென்னை மாநகராட்சிப் பகுதியில் விபத்து மற்றும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தெரு நாய், வளா்ப்பு நாய் மற்றும் பூனைகளை புதைப்பதற்காக கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அதற்கென தனி இடம் உள்ளது. இந்நிலையில், இவ்வாறு உயிரிழக்கும் நாய், பூனைகளை எரியூட்டும் மையம் கண்ணம்மாபேட்டையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இங்கு எரியூட்டப்படும் வளா்ப்பு பிராணிகளின் அஸ்தியையும் அதன் உரிமையாளா்கள் விரும்பினால் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.