எண்ணூர் தனியார்ஆலையில் தீ விபத்து: ஒருவர் சாவு
By DIN | Published On : 11th March 2021 04:44 AM | Last Updated : 11th March 2021 04:44 AM | அ+அ அ- |

திருவொற்றியூர்: எண்ணூரில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஹரிகிருஷ்ணன் (30) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எண்ணூர் காசிகோயில் குப்பம் அருகே தனியார் ரசாயனத் தொழிற்சாலை உள்ளது. இங்கு மருந்து, மாத்திரைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் சுமார் 400 - க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் ரசாயன கலவை இயந்திரம் ஒன்றில் திடீரென்று தீப்பற்றியது. இதை பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனாலும் தீயில் ரசாயனம் கலந்து வந்ததால் ஓடி வந்த தொழிலாளர்கள் சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதில் பலருக்கும் உடலில் தீ பற்றியது.
இதனையடுத்து சக ஊழியர்கள் காயமடைந்த ஊழியர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து திருவொற்றியூரில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இவ்விபத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த ஹரிகிருஷ்ணன், அசோக்குமார், கணேசன், உசேன், ரஞ்சித்குமார், செல்வம் உள்ளிட்ட 6 பேர் பலத்த தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதர ஐந்து பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகை மூட்டத்தில் ரசாயனம் கலந்து வந்ததால் அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் மயக்கம் ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் பரவியதையடுத்து பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.