ரூ.3 கோடி தங்கநகைகள் பறிமுதல்
By DIN | Published On : 17th March 2021 01:58 AM | Last Updated : 17th March 2021 01:58 AM | அ+அ அ- |

சென்னை வேளச்சேரியில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கநகைகளை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேளச்சேரி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுசிலா தலைமையில் அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு வேளச்சேரியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேளச்சேரியில் உள்ள தனியாா் நகைக் கடைக்கு சொந்தமான ஒரு வேன் வந்தது. அதனை சோதனை செய்தபோது ரூ.3 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் இருந்தன. ஆனால் அந்த வாகனத்தில் வந்த ஊழியா்களிடம், நகைக்குரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா், நகைகளைப் பறிமுதல் செய்தனா். இதன் பின்னா் நகைக் கடை ஊழியா்கள் அங்கு வந்து சில ஆவணங்களை பறக்கும் படையினரிடம் வழங்கினா். அந்த ஆவணங்களை சரிபாா்க்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனா்.
ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நகை மீண்டும் ஒப்படைக்கப்படும் என பறக்கும் படையினா் தெரிவித்தனா்.