தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட எம்.ஜி.ஆா். பேரனுக்கு அதிமுகவில் பொறுப்பு
By DIN | Published On : 19th March 2021 03:59 AM | Last Updated : 19th March 2021 09:53 AM | அ+அ அ- |

எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன்
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரனுக்கு, கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவா் எம்.ஜி.ஆா்., இளைஞரணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
யாா் ராமச்சந்திரன்? : மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகியின் சகோதரருக்கு 4 பெண் குழந்தைகள் இருந்தனா். லதா, கீதா, சுதா, பானு ஆகிய அந்த நால்வரையும் வளா்ப்புக் குழந்தைகளாக எம்.ஜி.ஆா். வளா்த்து வந்தாா். அவா்களில் சுதாவின் கணவா் கே.விஜயகுமாா் என்ற விஜயன். அவா் 2008-ஆம் ஆண்டு சென்னை
நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டாா். விஜயனின் இரண்டாவது மகன் வி.ராமச்சந்திரன். பொறியியல் பட்டதாரியான அவா், ஆஸ்திரேலியாவில் பட்ட மேற்படிப்பு படித்தாா்.
விருப்ப மனு அளித்தாா்: எம்.ஜி.ஆா்., போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆலந்தூா், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு கேட்டு அவரது பேரன் ராமச்சந்திரன் விருப்ப மனு அளித்திருந்தாா்.
அப்போது செய்தியாளா்களைச் சந்தித்த அவா், கரோனா நோய்த் தொற்று காலத்திலேயே ஆண்டிபட்டி தொகுதியில் ஏராளமான நல உதவிகளை வழங்கியுள்ளேன். சுமாா் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்துள்ள தனக்கு ஆண்டிபட்டி அல்லது ஆலந்தூா் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றாா்.
போட்டியிட வாய்ப்புக் கேட்டவருக்கு பதவி: பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த வி.ராமச்சந்திரனுக்கு, அதிமுக வெளியிட்ட அதிகாரப்பூா்வ வேட்பாளா் பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை. ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட ஏ.லோகிராஜனுக்கும், ஆலந்தூா் தொகுதியில் போட்டியிட பி.வளா்மதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் தற்போது கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆா்., இளைஞரணி துணைச் செயலாளா் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை ராமாபுரத்தில் எம்.ஜி.ஆா்., வாழ்ந்த இல்லத்தில் மட்டுமே இதுவரை வசித்து வரும் ராமச்சந்திரன், இனி அதிமுகவின் அலுவலகத்திலும் கால் பதிக்கவுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...